ஞாயிறு, 20 நவம்பர், 2022

கஞ்சி குடித்தல்...1

கஞ்சி குடித்தல்...1

கஞ்சி குடிக்க ஆரம்பிக்கும் பொழுது அரைத் திட நிலையில் இருக்கும்,  சிறு, சிறு கவளமாக உள் செல்ல, செல்ல... பிசைந்து, பிசைந்து அது கூழ்ம நிலைக்கு மாறும்... பிறகு திரவ நிலைக்கு வந்து விடும்.

கஞ்சிக்கு தொட்டுக்க உகந்தது என்பது கஞ்சியின் நிலையைப் பொறுத்தது... வறுத்த கருவாடு, பொரித்த மோர் மிளகாய், பூண்டு ஊறுகாய், வறுத்த பருப்பு துவையல், சுண்ட குழம்பு என்று நிறைய இருக்கிறது.

எளிமையான கஞ்சி ... பழங்கஞ்சி தான், அதை ஊறல் போட்டால் சுண்ட கஞ்சியாகி போதையேற்றும்...!

கஞ்சியை வட்டிலில் தான் குடிக்கணும்... அது தட்டுக்கும், கிண்ணத்திற்கும் இடையிலான ஒரு பாத்திரம்.

நிறையச் செலவு செய்து செய்யப்படும் நோன்புக் கஞ்சி.. ஒரு வகையான உணவு பண்டமாக மாறிவிடுகிறது. அது கஞ்சியாக இருப்பதில்லை...!

எந்த கஞ்சி.. !? அரிசிக் கஞ்சி தான் சிறந்தது. உடைத்த கோதுமை கஞ்சி, ரவை கஞ்சி எல்லாம்...மொத்தத்தில் வேஸ்ட்...

இந்த ரவை இருக்கிறதே... அது உப்புமா.. வாக ஆண்களின் வாழ்க்கையில் விளையாடியது மட்டுமல்லாமல் கஞ்சியாகவும் கொடுமை செய்யும். 

இந்த  ... "ரவா தோசா" என்று தூக்கிக்கொண்டு வராதீர்கள்.. ! இது ரவையால் நிகழும் உணவல்ல... அதில் தூவும் மல்லித்தழை, பச்சைமிளகாய் மற்றும் சீரகத்தால் சுவைக்கும் பண்டம்.

ஏனிந்த கஞ்சி பிதற்றல்...!

கடந்த டிசம்பரில் ஊரிலிருந்தேன்..  கோவிட் ஒமிக்கிரான் குத்தாட்டம் போட்டு.. தப்பிப் பிழைத்து சிங்கை வந்து சேர்ந்தேன்.  சில வாரங்களுக்கு முன்பு இந்த ஸ்ப்ப்  வைத்துச் செய்த விளையாட்டில்... !

கஞ்சி குடித்தால்... நலலாயிருக்கும் போல என்று வாழ்க்கைத்துணையிடம் கேட்டபொழுது ... எழுந்த பழைய நினைவலைகளால்.. எழுந்த ஒரு பதிவு...!

நாங்கள் நகரத்தில் குடியிருந்தோம்... இன்னும் குறிப்பாக எங்கள் வீடு மருத்துவமனைகள் நிரம்பிய பகுதியில் இருந்தது...! என்னுடைய சிறு வயதில்... மருத்துமனைக்கு உணவுக்கொண்டு கொடுப்பது அன்றாட வழக்கமாக இருந்தது..! அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்த தருணங்கள் உண்டு...! ஏனென்றால்... யாராவது மருத்துவமனையில் இருந்தால்.. அம்மா... மாவாட்டி இட்லி சுடுவார்...! அப்பொழுது கிரைண்டர் எல்லாம் கிடையாது... ! எங்களுக்கு இட்லி காலை உணவாக கிடைக்கும்....!

பள்ளிக்கு செல்வதற்கு முன்பு அம்மா கொடுக்கும் அந்த இட்லி வாளியை மருத்துவமனையில் இருக்கு கிராமத்து நண்பர் அல்லது உறவினருக்கு கொடுத்து விட்டு செல்வோம் நானும் எனது அக்காவும்..!

அம்மா கஞ்சி தயாரிப்பதில் மிகத் தனித்துவமானவர்... சோற்றை வேக வைத்தபிறகு அதை மலர, மலர வேகவைத்து கஞ்சி தயாரிப்பார். அந்த கஞ்சியை உப்பு ஊறுகாயுடன் அருந்துகிற யாருக்கும் புது தெம்பும், திராணியும் வரும். 

அம்மா தயாரிக்கும்... பேறுகால பத்திய குழம்பு... மகப்பேற்றுக்கு பிந்தைய  உணவாக எங்கள் வட்டாரத்தில் மிக முக்கிய உணவு. அந்த பொரிச்சகுழம்பு என்று நோயாளிகளுக்கு என்று பிரத்தியேகமாகச் செய்வார்கள்... அது மிகவும்... உன்னதமானது...!

கஞ்சி தொடரும்...!

சனி, 17 செப்டம்பர், 2022

பெயரில் என்ன இருக்கிறது...!


வயது ஏற, ஏற தூங்கும் நேரம் குறைந்துகொண்டே வருகிறது. நேர விழுங்கிகளிடம் தப்பிப் பிழைக்க விழைந்த காலம் போயி... நேரத்தைக் கடத்த விழைகிற.. .காலத்திற்கு வந்து விட்டோம்... மண்டைக்குள் "தோழர் Jamalan Tamil பல ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன காந்தியை மீள் வாசிப்பு செய்யுங்கள்..." மணியடிக்க...!


காந்தி மண்டையைக் கனக்கச் செய்தார்...! காந்தியின் வாயிலாக லெனின் புரட்சி சாத்தியமா...!? எனக்குள் குறு,குறுத்துக் கொண்டிருக்கிற... சமூக, அரசியல் தேடல்...! காந்தியும், லெனினும்  காத்திருப்பு பட்டியலில்...!


Charles Dickens சரணடையலாம் என்றால்...! விமர்சனங்கள் என்றாலே வெம்புகிற மனதிடம்... ஆற்றுப்படுத்தலின்றி அல்லல் உறுகிறது...!


தோழர் ஒருவர் கொடுத்த ஷேக்ஸ்பியரின் ரோமியோ மற்றும் ஜீலியட் கண்ணில்பட்டது. நமது ஆங்கிலத்திற்கு... இரண்டு பொழிப்புரை மற்றும் விளக்கவுரை துணையுடன்... வாசிக்கத் தொடங்கியாயிற்று...!


முன்பே இந்த கதையின் சுருக்கம் தெரியுமென்பதால்... ஒரு துயரமான காதல் கதை என்கிற அளவில் உள்ள புரிதலில் தொடங்கினேன்...!


ஷேக்ஸ்பியரின் தத்துவ விளாசல்களில்... சுருண்டு விட்டேன். தேங்கி, வழிந்து, ஓடிக்கொண்டிருக்கிறேன்... !


ஏனிந்த புலவர்கள் தலைவிகளை வைத்து அறத்தையும், தத்துவத்தைப் பேசுகிறார்கள்...!?


ஜீலியட்... ரோமியோவை காதல் வெப்பத்தில் கொதிகலனில் வைக்கிறாள்.. அவன் உருகி நிற்கிற நிலையில்... தத்துவ சம்மட்டிகளால் சடாரென்று அடிக்கிறாள்...!


தமிழின் அகப்பாடல்களிலும்... இந்த போக்கை காணலாம்...! வழக்கறிஞர் Prabhu Rajadurai அய்யாவின் நிகழ்வுடன் தொடர்பு படுத்தும்  அகப்பாடல் பதிவுகள்... ஒரு வாசிப்பனுபவம்...!


தலைவிகளின் தத்துவ தாக்கங்களை முன் வைத்து கிளியோபாட்ரா, சீசர் உறவு, கலிகுல்லாவின காதல் மற்றும் ஜமாலின் நீலப்படங்களின் உடல் அரசியலையும் ஒரு மீள் வாசிப்பு செய்ய வேண்டும்.


‘Tis but thy name that is my enemy:

Thou art thyself, though not a Montague.

What’s Montague? It is nor hand nor foot

Nor arm nor face nor any other part

Belonging to a man. O be some other name.

What’s in a name? That which we call a rose

By any other name would smell as sweet;

So Romeo would, were he not Romeo call’d,

Retain that dear perfection which he owes

Without that title. Romeo, doff thy name,

And for that name, which is no part of thee,

Take all myself.


உன்னுடைய பெயரில் என்ன இருக்கிறது...!? ரோஜா என்பதை .. வேறாக அழைத்தால் மணக்காதா...!? ஓடையாய், பேருவியாய், ஓடிக்கலந்து பெரு வெளியாய்.. நின்று.. அங்கே ரோமியோவை தத்துவ வெளியில் மிதக்க  விடுகிறாள்...!


இந்த ஒரு பத்தியை எடுத்துக்கொண்டு... இந்திய துணைக்கண்ட நிலப்பரப்பில் பிறப்பால் பேசப்படுகிற ஏற்ற தாழ்வுகளைப் பற்றி அலச நிறைய இருக்கிறது.


எனக்கு வேறொன்று உதித்தது...! ஜீலியட் பெயரில் என்ன இருக்கிறது... என்பதன் நீட்சியாக எது உனது அடையாளம் (ஐடென்டிட்டி) பற்றிப் பேசுகிறாள்...!


எனது மூளை உடனே... பொருளின் தனித்துவமான அடையாளம் (unique object identity) என்கிற கணினி சிந்தனைக்குள் செல்கிறது.


எது எனது அடையாளம்...!?


அடையாள சிக்கலை முன்வைத்து அரிஸ்டாட்டில் மற்றும் பிளாட்டோ உடன் முரண்பட்ட உரையாடலை வாசித்த ஞாபகம்...!


பர,பர வென்று மேலை, கீழை நாகரிகங்களிலிருந்து... பூமிப் பந்தின் கிழக்கிருந்து, மேற்காக.. வடக்கிலிருந்து தெற்காக எழுந்த தத்துவ கூறுகளில்...  அடையாள சிக்கலை பேசிய தத்துவங்களைப் பற்றிய தேடல் பற்றிக்கொண்டது...! அடுத்த சில ஆண்டுகளுக்கான நூல்கள் பட்டியல் தயாரானது...! அதில் உடனடியாக நான்கைந்து புத்தங்களுடன் வீட்டிற்கு வந்திறக்கினேன்...!


அப்பன்காரன்... ஏதோ புத்தகத்துடன் வந்திருப்பதைப் பார்த்து என்னுடைய மகளுக்கு ஐயம்...! , ஏற்கனவே இந்த அடுக்கில் இருக்கிற புத்தங்களைப் பார்த்து அடிக்கடி கேட்கிற வினா தான்...! நீங்க படிச்சு நாங்க பார்த்ததில்லை...! "சும்மா பெருமைக்கு அடிக்கி வைத்திருக்கிறீர்களா...!?"


நான் வாசித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தாள்...! ஆர்வமாக வந்தாள்... புத்தகங்களைப் புரட்டிப்பார்த்தாள்... சிரித்துக்கொண்டே சென்று... அவள் அம்மாவிடம் ஏதோ சொல்லிவிட்டுச் சென்றாள்...!


ஏய்...

என்னடி சொன்னா...!?

ஒன்றுமில்லே...!

சிரிச்சிட்டே போனா...

என்ன சொன்னா...

அதான் ஒன்னுமில்லேன்றேன்ல...

அதை தான் சொல்லு...

அது...

"உனக்குக் கிறுக்கு புடிச்சிருக்கான்னு கேட்கிறா...!?"

அவ கேட்டாளா...!?

அவள வைச்சு...

நீ... கேட்கிறாயா...!

கழுத்தைத் திருப்பி... எள்ளலுடன், ஒரு மந்தகாச புன்னகையுடன் நகர்கிறார்... எந்தன் தலைவி...!

ஜீலியட் மண்டைக்குள் அறைகிறாள்...

"Romeo, doff thy name, 

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

உதவி செய்வதும்... அதனையொட்டிய உரையாடல்களும்...!


வாரயிறுதி தொலைப்பேசி அழைப்புகள்... பெரும்பாலும்... ஒரு புலம்பலாக இருக்கும்...! நீண்ட நெடிய காலம் கடந்து வந்த ஓர் அழைப்பு... அழைப்பின் நோக்கம் முக்கியம்... "நான் யாருக்காவது கல்வி உதவி செய்யலாமென்று இருக்கிறேன்...!", நீ... செய்துக்கொண்டிருப்து எனக்குத் தெரியும்... யாருக்காவது தேவைப்பட்டால் சொல்... நான் செய்கிறேன் என்றார்...! மகிழ்ச்சி...! உதவி செய்ய முன் வருவது... சமீப காலங்களில் அதிகரித்திருக்கிறது. வறுமைக்கும், நடுத்தர வர்க்கத்திற்கும் இடையில் போராடிக்கொண்டிருந்தவர்கள்... உழைப்பாலும், சமூக நீதி கல்வி வாய்ப்புகளாலும் முன்னேறி... உலக மயமாக்கல் தந்த வாய்ப்புகளில் நடுத்தர வர்க்கத்திற்கும், உயர் நடுத்தர வர்க்கத்திற்கும் இடையில் தொங்கிக்கொண்டு... கீழிருப்பவனுக்குக் கைகொடுக்க வேண்டும் என்று எண்ணுகிற எண்ணமே மிக உயர்வானது...! உதவ வேண்டும் என்கிற எண்ணமும், விழைவும்... அதைச் செயலாக்கி வெற்றி பெறச் செய்வதும் முக்கியம். உண்மையில் உதவி செய்கிற நிகழ்வில் நன்கொடை, இலவசமாகக் கொடுப்பது தவிர்த்து... மிகப் பெரும்பான்மை தோல்வியில் முடியும். உதவி என்பது ஒரு மனிதனின் துன்பத்திலிருந்து (அ) துயரத்திலிருந்து மீட்கவோ, அவருடைய வாழ்க்கையை அடுத்தகட்ட நகர்வுக்கு கொண்டுசெல்ல நிகழ்த்தப்படுகிற நிகழ்வு...! சிலர்... உதவி என்பதை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் செய்கிற ஒன்றாக கருதி... அலப்பறை கூட்டுகிறார்கள்...! "நண்பன் என்று அவனுக்கு Resume தயார் செய்து நிறுவனத்தில் வேலை வாங்கி தந்ததே நான் தான்..." நன்றி மறந்துவிட்டான் என்று ஒருவர் புலம்பினார். "நான் நண்பர்களுக்காக இழந்தது எவ்வளவு தெரியுமா...!" என்று ஒருவர் புலம்பினார்...! நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் செய்வது உதவி அல்ல... அது வாழ்வியல் கடமை...! இந்த மாதிரியான நபர்கள்... நாளை நான் என் பொண்டாட்டி, பிள்ளைகளுக்கு எவ்வளவு செய்தேன் தெரியுமா...! என்று கேட்கிற அளவுக்குச் சுயநலமாக மாறுவார்கள்...! மனிதன் விலங்காக அல்லாமல்... தத்துவஞானி சாக்ரடீஸ் சொன்ன " மனிதன் ஒரு சமூக விலங்கு" என்பதன் பொருளே...! நாம் மனிதர்களாக ஒருவருக்கொருவர் உதவி வாழ்வதாக இருக்கும்...! நமக்கு அறிமுகம் அல்லாத மனிதர்களுக்கு உதவ எண்ணுகிற... உள்ள வேட்கையும், உந்தலும் தான்... உதவி என்பதன் உண்மையான பொருள்....! வலைப்பின்னல்... பர்சனல் கேரியர் நெட்வொர்க்கிங் என்பது சமூக ஊடக காலத்தில்... சுயநலத்திற்காக முகிழ்வதற்கு முன்பே... மனிதர்களுக்கு உதவுவதற்கு என்று ஒரு வலைப்பின்னல் இருக்கிறது... அதன் வாயிலாகத் தான் வறுமை ஒழிப்பு, உணவு வழங்கல் போன்று எண்ணற்ற திட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. சுயநலமான வலைப்பின்னல் மாதிரியல்ல... இந்த உதவுகிற வலைப்பின்னல் என்பது மிகவும் நெகிழ்வு தன்மைகொண்டது... விருப்பமிருப்பவர்கள் தேவைக்கேற்ப இணைந்துக்கொளவார்கள்...! இதை சில எடுத்துக்காட்டுகளுடன் விளக்க வேண்டும்... நான் 2008-ல் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உடை வழங்க முடிவு செய்தேன்...! அதை உணர்ந்த நண்பர் Joseph B Paulraj அவருடைய வட்டத்தில் முயற்சி செய்கிறார்... அப்பொழுது பதிவுலகத்திலிருந்த பரிசல்காரன் (என்கிற) கிருஷ்ணகுமார் உதவ முன்வந்து அந்த சங்கிலியில் தன்னை இணைத்துக்கொள்கிறார். திருப்பூரில் ஆயத்த ஆடை நிறுவனத்தில் மேலாளராக இருக்கிற இவர்... அவருடைய நண்பர்கள் துணையுடன்... "நீங்கள் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் சொல்லுங்கள் நாங்கள் ஆடையைத் தயார் செய்து தருகிறோம் என்று", " அயர்னிங் மற்றும் பேக்கேஸ்" செலவுகளை மட்டும் பெற்றுக்கொண்டு அத்துணை குழந்தைகளுக்கும் இரண்டு உடைகளைப் பட்டுக்கோட்டைக்கு அனுப்பி வைத்தார்...! நான் யாரென்று அவருக்கு இந்த நாள் வரை தெரியாது...! மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே முக்கியம்...! கடலூர் புயல், வெள்ள நிவாரண நிகழ்வையொட்டிய.... அங்கிருக்கும் கிராமப்புற பள்ளிக்குழந்தைக்கு.. புத்தகப்பை வழங்க முயன்றோம்...! நாங்கள் இலக்கு வைத்த 300 பைகளை 500 ஆக மாற்றியதில் ஈரோடு கதிர் அவர்களுக்கு முக்கிய பங்கு இருந்தது. பை தயாரிக்கும் நிறுவனத்தை நேரடியாக தொடர்புகொண்டு மிகக் குறைந்த அடக்க விலையில் அந்த பைகளைப் பெற்றுத் தந்தார்...! உற்பத்தியாளர் இடத்திலிருந்து... கடலூர் சென்று சேருவதற்கான லாஜிஸ்டிக்ஸ் என்கிற ஒன்றுக்கு இதுநாள் வரை அவர் என்னிடம் எந்த பொருளும் கோரியதில்லை.... உதவ முயல்வதற்கான... உதவி வலைப்பின்னல் தானாக அமையும்...! இங்கே இன்னும் மனிதர்கள்... சமூகமாக உயிர்ப்புடன் இருக்கிறார்கள்...! தொடரும்... உதவி செய்வதற்குப் பின்னால் உள்ள சிரமங்களும்... சிக்கல்களும்...!

செவ்வாய், 29 ஜூன், 2021

புனைவு - இருளோடு உறவாடிய பொழுதுகள் - பகுதி - 5 (உள்ளும் புறமும் -2)

 (குறிப்பு : புனைவு எழுத்துகளில் உண்மையைத் தேடாதீர்கள். கொஞ்சம் உண்மையும், நிறையக் கற்பனையும் கலந்த நெடுந்தொடர்) 

முகர்ஜி -யை ஓர் மதிய உணவு இடைவேளையில் சந்தித்துப் பேசத் தொடங்கி விவாதத்தில் முடிந்த நாளில்...


அவனைப் பற்றித் தெரிந்துகொண்டவை. எங்களுடைய நிறுவனம் ஒரு வேலைத்திட்டத்தை (project) இன்னொரு நிறுவனத்துடன் பங்காளித்துவ (partnership ) முறையில் செய்கிறது. அதற்கு client engagement consultant ஆக வந்திருக்கிறாள்.

ஆரம்பக்கட்டமாக அந்த நிறுவனம் பெற்றிருப்பது 20 மில்லியன் வெள்ளி அளவிலான ஒப்பந்தம். மொத்தமாக இந்த வேலையின் நிகர மதிப்பு ஐந்தாண்டுகளில் 50லிருந்து 60 மில்லியன் வெள்ளிகள் வரும். 

மிகப்பெரிய வேலைத்திட்டம், நீண்டகால வேலைத்திட்டம்...

5 சதவிகிதம் வரை அவனுடைய ஒற்றை ஆள் நிறுவனத்துக்குத் தரகுத்தொகையாக வரும். மிகப்பெரிய தொகை. ஒரே நேரத்தில் இதே மாதிரி இரண்டு, மூன்று வேலைத்திட்டங்களுக்கு பணியாற்றிக்கொண்டிருப்பான் முகர்ஜி.

ஆறடிக்கு அதிகமான உயரத்துடன், மங்கோலிய மஞ்சள் நிறம் மின்ன... பெருத்த தொப்பையுடன், உயர்ரக ஆடை உடுத்திய , பச்சையான சிரிப்பு, கேவலமான புன்னகை, செருப்பால் அடித்தாலும் சிரித்துக்கொண்டேயிருக்கிற அற்ப ஈனபிறவி மாதிரியான ஒரு கேவலமான உடல்மொழியுடன் ஒரு மனிதன்.

முகர்ஜி ஒரு மின்தூக்கியில் (lift) உள்ளே நுழைந்து.... அவனுடைய தளத்தில் வெளிவரும்வரை, அந்த மின்தூக்கியில் பத்து பேர் இருந்திருந்தால் ஐந்து பேரிடம் பேசியிருப்பான்... அதில் இரண்டு (அ) மூன்று பேர் அவனிடம் கைப்பேசி எண்களை மாற்றிக்கொண்டிருப்பார்கள்.

நானெல்லாம் ஓர் அலுவலகத்தில் பல வருடம் குப்பைக்கொட்டிருந்தாலும்... அடுத்த ஆண்டு பக்கத்து கேபின்காரன் கூட என்னை மறந்திருப்பான்.

முகர்ஜி கையாள்வது மனிதர்கள்... மனிதர்கள்.... மனிதர்கள்....
இல்லை... இல்லை...
மனங்கள்... மனங்கள்... மனங்கள்...

நூற்றுக்கணக்கான மனிதர்கள்... அதுவும் மூளை திறன் சார்ந்த வேலைதிட்டகளில்... மனித மனங்களைக் கையாள்வது என்பது மிகவும் சிக்கலானது.

பல மூளைகள் மேலாண்மையைக் கரைத்துக்குடித்து விட்டு ஒன்றுகூடி ஒரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முயலும்பொழுது... ஒரே ஒரு மனதில் எழுகிற பிசிறு... மொத்த வேலைத்திட்டத்தையும் சிதைத்துவிடும்.

கிளைக்கு, கிளை தாவும் மனித மனக்குரங்குகளை கையாளும் ஒரு வித்தைக்காட்டி முகர்ஜி.

ஆயிரம் வெள்ளி கோட், சூட் போட்டுக்கொண்டு மூடிய சந்திப்பு அறைக்குள் (closed meeting room) ... சுழற்றி வீசப்படும்...மற்றவர்களின் மனக்கழிவுகளையும், வக்கிரங்களையும் சுமந்துகொண்டு ஒரு கேவலமான சிரிப்புடன் அறையை விட்டு வெளியே வருவான்... 

அவனுடைய சுயம், சுயமரியாதை எதைப்பற்றியும் கவலைப்படாத, காசுக்காக வளைந்து, நெளிந்து, குழைந்து... தேன் தடவிய பேச்சுகளைப் பேச வேண்டிய  ஒரு ஈனவாழ்க்கை....

இவ்வளவையும் அவன் செய்தாக வேண்டும்... அது ஒற்றை இலக்கு அந்த வேலைத்திட்டம் முழுமையாக நிறைவேற வேண்டும். இரண்டு நிறுவனங்களும் ஒப்பந்தப்படி பொருளாதார பரிமாற்றங்களை நிறைவேற்ற வேண்டும்.



சனி, 26 ஜூன், 2021

புனைவு - இருளோடு உறவாடிய பொழுதுகள் - பகுதி - 4 (உள்ளும் புறமும் -1)

 (குறிப்பு : புனைவு எழுத்துகளில் உண்மையைத் தேடாதீர்கள். கொஞ்சம் உண்மையும், நிறையக் கற்பனையும் கலந்த நெடுந்தொடர்)

மனம் தேடுவது ஒரு சிறு அங்கீகாரம்... நம்மைப் பெருமையாகப் பேசுகிற நண்பன், தோழன் , குடும்பத்தார் அல்லது ஊர்க்காரர்கள் யாராவது அருகாமையில் இருக்கிறார்களா என்று ஏங்கித் தவிக்கும். ஊராரிடம் எல்லாம் தன்வூட்டுக்காரர் அருமை,பெருமைகளைப் பீற்றிக்கொள்ளும் மனைவிகள் கூட, முகத்துக்கு நேராகக் கணவனிடம் பெருமைகளைப் பேசுவது கிடையாது. "நீ பெத்த புள்ளைதானே..." என்று பிள்ளைகளின் சிறுமைகளைக் கூட அவன் கணக்கில் ஏற்றிவிடுவார்கள். வாழ்ந்தபொழுது அவனுடைய முகத்துக்கு நேராக ஒரு வார்த்தை பெருமையாகப் பேசாதவர்கள். செத்தபிறகு சுடுகாட்டுக்கொட்டகையில் உட்கார்ந்துகொண்டு "எவ்வளவு நல்ல மனுசன் தெரியுமா...!, ஒரு ஈ, எறும்புக்குக் கூட துன்பம் தரக்கூடாதென்று வாழ்ந்தவர் ...!" என்று பேசிக்கொண்டிருப்பார்கள். எழுத்தாளர் ஜி.நாகராஜன் கூறியது போல "மனிதன் மகத்தான சல்லிப்பயல்" "உள்ளூர் மாடு விலை போகாது” என்பார்கள். எங்கேயோ இருப்பவர்களைக் கொண்டாடுகிற மனிதர்கள், அருகாமையில் இருப்பவர்களை எளிதாகக் கடந்து செல்கிறார்கள் ஒருவித அலட்சியத்துடன். முகர்ஜி - ஓர் சிறிய அங்கீகாரத்திற்காக ஏங்கியவன்...! அவன் இங்கிருந்து கிளம்புகிறபொழுது ஏற்பட்ட உரசலில்... அவனுடைய மனது கலங்கித் தவித்த ஒன்று, அவன் மீதான ஏளனமும், இளக்காரமும் கூடிய பார்வையும், பழக்கமும். அவனுடைய சகோதரி வாயிலாகக் கிடைத்த... கடைசியாக அவன் எழுதிய குறிப்புகளில்... "அவனுடைய மனது அங்கீகாரத்திற்காக ஏங்கித் தவித்திருப்பதை உணர முடிந்தது." இத்தனை யாண்டுகளில் அவன் அழைத்தபொழுது பேசியிருக்கலாம், மன்னித்திருக்கலாம்... அவனை மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் இகழ்ந்திருக்கலாம், ஆனால் உன்னை எனக்குப் பிடிக்கும் என்று சொல்லியிருக்கலாம்... எத்தனையோ 'லாம்' - கள். ஆனால், அவன் கொட்டிய சொற்களில் ஏற்பட்ட காயங்களை ஒரு வேட்டைநாயைப் போல நக்கி, நக்கி காலத்தைக் கடத்தி விட்டேன். இனி, அழைத்தால் எடுக்க அவன் இல்லை என்கிற உண்மை முகத்தில் அறைகிறது. கண்ணீர் முட்டுகிறது, துயரம் அலை, அலையாய் எழுந்து வருகிறது... மனம் ஆழ்கடல் தோணியாய் அல்லலுறுகிறது. முற்பகுதிகள்... https://pktpaariarasu.blogspot.com/2021/06/3.html
https://pktpaariarasu.blogspot.com/2021/06/2.html
https://pktpaariarasu.blogspot.com/2021/06/1.html

வெள்ளி, 25 ஜூன், 2021

புனைவு - இருளோடு உறவாடிய பொழுதுகள் - பகுதி - 3 (ஒளிரும் இருள்)

 (குறிப்பு : புனைவு எழுத்துகளில் உண்மையைத் தேடாதீர்கள். கொஞ்சம் உண்மையும், நிறையக் கற்பனையும் கலந்த நெடுந்தொடர்)

ஒளிரும் இருள்

இருள் ஒளிருமா…!?

ஒளிரும்…!

இரவு விடுதிகளில் (night club) இருள் ஒளிரும்.

நிறைந்த இருளில்  (complete darkness) தான் மெலமைன்(Melamine)  என்கிற ஹார்மோன் சுரக்குமாம்....! இருட்டு என்பதற்கும் இருள் என்பதற்குமே நிறைய வேறுபாடு உண்டு.

முழுமையான இருளை உணர மிகவும் கடினப்பட வேண்டிய சூழலில் நாம் வாழ்கிறோம்.... அது கடந்த காலங்களில் மிக இயல்பாக இருந்தது.

மிகச் சமீபத்தில் இருள் என்பதை நான் உணர்ந்தபொழுது என்பது... ஓர் கானகத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட நிகழ்வு.

இருளை உருவாக்குவதற்கு.... முதலில் செலவு செய்து நிறைய முறைகளில் அறைக்குள் இருளை உருவாக்கியிருப்பார்கள், பிறகு அந்த அறைக்குள் பல்வேறு கோணங்களில் ஒளிக்கற்றைகளைச் சுழற்றி பாய்ச்சும் வண்ண உமிழ் விளக்குகளை பொருத்தி இருப்பார்கள். அந்த ஒளிக்கற்றைகள் ஒன்றையொன்று வெட்டும் வெளியில் ஓர் இருள் இருக்கும். அந்த இருள் ஒளிரும்.

ஒவ்வொரு விடுதியிலும் வெவ்வேறு இடங்களில் ஒளிரும் இருள் வந்து போகும். பெரும்பாலும் அதை கசமுசா ஸ்பாட் எனப்படும். அந்த இடங்களில் இருக்கும் இருக்கைகள் சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

மைதானம் அளவில் இருக்கிற விடுதியில் சந்துகளும், மூலை முடுக்குகளும் இருக்கும். சிறிய விடுதிகள் கூட ‘ட’ மாதிரி அல்லது ‘ப’ மாதிரி அமைத்திருப்பார்கள்.

பிரம்மாண்ட விடுதிகளின் விளக்கு அமைப்புகளில் Lighting engineering  -ன் அத்தனை சாத்தியங்களையும் செய்திருப்பார்கள். பார் கவுண்டர் வடிவமைப்பு மிக முக்கியமானது. அதற்காக பார்த்து, பார்த்து வடிவமைக்கப்பட்ட பார் கவுண்டர்கள் இருக்கின்றன.

முகர்ஜி இரவு விடுதிகளின் அத்தனை வகைகளையும் அறிமுகம் செய்து வைத்தான். குடிப்பதற்கு 50க்கு மேற்பட்ட குவளைகள் இருப்பதைக் காண்பித்திருக்கிறான். வெறும் பிளாஸ்டிக் குவளைகளில் கலந்து குடிப்பதற்கும்… வித, விதமாக வடிவமைக்கப்பட்ட குவளைகளில் குடிப்பதின் வித்தியாசத்தை உணர வைத்திருக்கிறான்.

சிங்கையின் இரவு வாழ்க்கையும் (night life) , விடுதிகளும் (clubs) மற்ற இரவு வாழ்க்கை நகரங்களுடன் ஒப்பிட்டு ஒன்றுமே இல்லை என்பான் முகர்ஜி.

நான் திகைத்து நிற்பேன்…!

ஒருமுறை, மிகப்பெரிய விடுதியில் நுழைந்தோம்… என்ன குடிக்கிறாய் என்றான்…!?

வழக்கம்போல பீர் என்றேன்… போடா என்று சொல்லிவிட்டு… பக்கத்திலிருந்த இருக்கைகளைப் பார்த்தான், ஒரு சீனன் cognac வாங்கி இரண்டு குட்டிகளுடன் குடித்துக்கொண்டிருந்தான்.

என்னிடம் கேட்டான் அந்த cognac எவ்வளவு விலை இருக்கும் தெரியுமா என்றான்…!

தெரியவில்லை என்றேன்… முப்பதாயிரம் வெள்ளிக்கு மேல் என்று சொல்லிவிட்டு இரு, வருகிறேன் என்று போனான்.

ஒரு cognac போத்தலுடன் வந்து அமர்ந்தான். எவ்வளவு என்றேன்…!?

பத்தாயிரம் வெள்ளிகள்…. மூச்சு நின்று விட்டது, அதிர்ச்சியில் வியர்த்து, வெளிறி விட்டேன்.

அதுவரை 250 வெள்ளிக்கு XO வாங்கி குடித்ததையே வாழ்நாள் சாதனையாகப் பீற்றிக்கொண்டிருந்த எனக்கு மூச்சிரைத்தது...!

காசு கொடுத்துவிட்டேன் கவலைப்படாதே… என்றான்.

100 ஆண்டுகளுக்கு மேலாக ஊறிய திராட்சை ரசம், வாசனையே ஆளை மயக்கியது.

விடிய, விடியக் குடித்தோம்…! பேசினோம்…! குடித்தோம்…! பேசினோம்…!

ஒரு நாள் இப்படியென்றால்… இன்னொரு நாள் எங்காவது… சீப்பாக டைகர் பீர் கிடைக்குமா என்று அலைவான்.

முகர்ஜி சொல்வான் நான் ஆலோசகராக () வாங்குவது முழுவதும் எனது ஊதியம் கிடையாது. அது மனிதர்களைக் கையாளுவதற்குக் கொடுக்கப்படும் பணம், அதிலிருந்து தான் நமக்கும் செலவு செய்துகொள்கிறேன் என்பான்.

உயரத்திலிருந்து பள்ளத்தில் விழுவதை முயல்கிற வாழ்க்கை...!

முற்பகுதிகள்...

வியாழன், 24 ஜூன், 2021

புனைவு - இருளோடு உறவாடிய பொழுதுகள் - பகுதி - 2 (அறிமுகம்)

(குறிப்பு : புனைவு எழுத்துகளில் உண்மையைத் தேடாதீர்கள். கொஞ்சம் உண்மையும், நிறையக் கற்பனையும் கலந்த நெடுந்தொடர்)


மத்தியான வேளையில் தின்னச் சோறு செரிக்கிற இடைவெளியில் நடக்கிற திண்ணை பேச்சில் தான் இந்த மாமாஜி அறிமுகமானான். அது நடந்தே இருக்காவிடில்... என் வாழ்வின் இருண்ட பக்கங்கள் ஏதுமேயில்லாமல் போயிருக்கலாம்...!

மணிக்கணக்கில் பேசும் என்னுடைய பேச்சுக்கென்று கவனிப்பாளர்கள் இருந்தார்கள்... வந்தான் சட்டென்று மடைமாற்றிப் போனான்... அயோக்கியன்..முகர்ஜி.!

அந்த நாளில்.... அண்டை அயலக கடைகளில் கிடைக்கும் 5 முதல் 10 சதவிகிதம் வரையிலான விலை மலிவு பற்றியும், வணிக வளாகங்களிலும், தொடர் பல்பொருள் அங்காடிகளிலும் கிடைக்கிற கழிவுகள் பற்றிய விவாதம்...!

சட்டென்று வந்தான்... சொன்னான்... என்ன சேமிப்பு உங்களுக்குக் கிடைக்கும்...! நூறு வெள்ளி ஓர் ஆண்டுக்கு இருக்குமா...!? ஏன்? இதைப்பற்றி இவ்வளவு கவலைப்படுகிறீர்கள்...!? உங்கள் ஊதியம் அடுத்த ஆண்டு 10 சதவிகிதம் உயர வேண்டும் என்று கவலைப்படுங்கள்...! அது இந்த சில்லறை தேற்றுவதை விடுவதை உன்னதமானது...!

அவனை அப்பொழுதான பார்க்கிறேன்... ஆறு அடிக்குக் குறைவில்லா உயரம், மங்கோலிய மஞ்சள் நிறம், பெருத்த தொப்பை... சிரித்த முகம்... எல்லாவற்றையும் இலவாக அணுகும்.... பண்புடன்.... ஒரு மனிதன்... என்னோடு முரண்படுகிறான்...!

அடுத்த ஆறு மாதங்களில் அவனோடு ஈசிக்கொண்டிருக்க போகிறேன் புதுசா கட்டிக்கொண்ட மனையாளைப் போல என்பது அறியாமல்... தொண்டைக்குழியின் நீர் வறள விவாதம்..!

பச்சோந்திகள்... என்னோடு இருந்தவர்கள்... புதிதாய் வந்தவனுக்குத் தட்டிய ஜல்ராவில்... ஒன்று மட்டும் உண்மை...! இங்கே வாய்ப்புக்கிடைத்தால் அத்தனை அயோக்கியத்தனத்தைச் செய்ய இந்த மக்கள் தயார்.. அதற்கு ஒன்றே ஒன்று மட்டும் தான் விலை...! சமூக அங்கீகாரம்... அதை விலைகொடுத்து வாங்கி விட முடிந்தால்... எதையும் செய்யத் துணியும் இந்த கூட்டம்...!

முந்தைய பகுதி...

https://pktpaariarasu.blogspot.com/2021/06/1.html
Related Posts with Thumbnails