கஞ்சி குடித்தல்...1
கஞ்சி குடிக்க ஆரம்பிக்கும் பொழுது அரைத் திட நிலையில் இருக்கும், சிறு, சிறு கவளமாக உள் செல்ல, செல்ல... பிசைந்து, பிசைந்து அது கூழ்ம நிலைக்கு மாறும்... பிறகு திரவ நிலைக்கு வந்து விடும்.
கஞ்சிக்கு தொட்டுக்க உகந்தது என்பது கஞ்சியின் நிலையைப் பொறுத்தது... வறுத்த கருவாடு, பொரித்த மோர் மிளகாய், பூண்டு ஊறுகாய், வறுத்த பருப்பு துவையல், சுண்ட குழம்பு என்று நிறைய இருக்கிறது.
எளிமையான கஞ்சி ... பழங்கஞ்சி தான், அதை ஊறல் போட்டால் சுண்ட கஞ்சியாகி போதையேற்றும்...!
கஞ்சியை வட்டிலில் தான் குடிக்கணும்... அது தட்டுக்கும், கிண்ணத்திற்கும் இடையிலான ஒரு பாத்திரம்.
நிறையச் செலவு செய்து செய்யப்படும் நோன்புக் கஞ்சி.. ஒரு வகையான உணவு பண்டமாக மாறிவிடுகிறது. அது கஞ்சியாக இருப்பதில்லை...!
எந்த கஞ்சி.. !? அரிசிக் கஞ்சி தான் சிறந்தது. உடைத்த கோதுமை கஞ்சி, ரவை கஞ்சி எல்லாம்...மொத்தத்தில் வேஸ்ட்...
இந்த ரவை இருக்கிறதே... அது உப்புமா.. வாக ஆண்களின் வாழ்க்கையில் விளையாடியது மட்டுமல்லாமல் கஞ்சியாகவும் கொடுமை செய்யும்.
இந்த ... "ரவா தோசா" என்று தூக்கிக்கொண்டு வராதீர்கள்.. ! இது ரவையால் நிகழும் உணவல்ல... அதில் தூவும் மல்லித்தழை, பச்சைமிளகாய் மற்றும் சீரகத்தால் சுவைக்கும் பண்டம்.
ஏனிந்த கஞ்சி பிதற்றல்...!
கடந்த டிசம்பரில் ஊரிலிருந்தேன்.. கோவிட் ஒமிக்கிரான் குத்தாட்டம் போட்டு.. தப்பிப் பிழைத்து சிங்கை வந்து சேர்ந்தேன். சில வாரங்களுக்கு முன்பு இந்த ஸ்ப்ப் வைத்துச் செய்த விளையாட்டில்... !
கஞ்சி குடித்தால்... நலலாயிருக்கும் போல என்று வாழ்க்கைத்துணையிடம் கேட்டபொழுது ... எழுந்த பழைய நினைவலைகளால்.. எழுந்த ஒரு பதிவு...!
நாங்கள் நகரத்தில் குடியிருந்தோம்... இன்னும் குறிப்பாக எங்கள் வீடு மருத்துவமனைகள் நிரம்பிய பகுதியில் இருந்தது...! என்னுடைய சிறு வயதில்... மருத்துமனைக்கு உணவுக்கொண்டு கொடுப்பது அன்றாட வழக்கமாக இருந்தது..! அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்த தருணங்கள் உண்டு...! ஏனென்றால்... யாராவது மருத்துவமனையில் இருந்தால்.. அம்மா... மாவாட்டி இட்லி சுடுவார்...! அப்பொழுது கிரைண்டர் எல்லாம் கிடையாது... ! எங்களுக்கு இட்லி காலை உணவாக கிடைக்கும்....!
பள்ளிக்கு செல்வதற்கு முன்பு அம்மா கொடுக்கும் அந்த இட்லி வாளியை மருத்துவமனையில் இருக்கு கிராமத்து நண்பர் அல்லது உறவினருக்கு கொடுத்து விட்டு செல்வோம் நானும் எனது அக்காவும்..!
அம்மா கஞ்சி தயாரிப்பதில் மிகத் தனித்துவமானவர்... சோற்றை வேக வைத்தபிறகு அதை மலர, மலர வேகவைத்து கஞ்சி தயாரிப்பார். அந்த கஞ்சியை உப்பு ஊறுகாயுடன் அருந்துகிற யாருக்கும் புது தெம்பும், திராணியும் வரும்.
அம்மா தயாரிக்கும்... பேறுகால பத்திய குழம்பு... மகப்பேற்றுக்கு பிந்தைய உணவாக எங்கள் வட்டாரத்தில் மிக முக்கிய உணவு. அந்த பொரிச்சகுழம்பு என்று நோயாளிகளுக்கு என்று பிரத்தியேகமாகச் செய்வார்கள்... அது மிகவும்... உன்னதமானது...!
கஞ்சி தொடரும்...!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக