செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021
உதவி செய்வதும்... அதனையொட்டிய உரையாடல்களும்...!
செவ்வாய், 29 ஜூன், 2021
புனைவு - இருளோடு உறவாடிய பொழுதுகள் - பகுதி - 5 (உள்ளும் புறமும் -2)
(குறிப்பு : புனைவு எழுத்துகளில் உண்மையைத் தேடாதீர்கள். கொஞ்சம் உண்மையும், நிறையக் கற்பனையும் கலந்த நெடுந்தொடர்)
முகர்ஜி -யை ஓர் மதிய உணவு இடைவேளையில் சந்தித்துப் பேசத் தொடங்கி விவாதத்தில் முடிந்த நாளில்...
அவனைப் பற்றித் தெரிந்துகொண்டவை. எங்களுடைய நிறுவனம் ஒரு வேலைத்திட்டத்தை (project) இன்னொரு நிறுவனத்துடன் பங்காளித்துவ (partnership ) முறையில் செய்கிறது. அதற்கு client engagement consultant ஆக வந்திருக்கிறாள்.
ஆரம்பக்கட்டமாக அந்த நிறுவனம் பெற்றிருப்பது 20 மில்லியன் வெள்ளி அளவிலான ஒப்பந்தம். மொத்தமாக இந்த வேலையின் நிகர மதிப்பு ஐந்தாண்டுகளில் 50லிருந்து 60 மில்லியன் வெள்ளிகள் வரும்.
மிகப்பெரிய வேலைத்திட்டம், நீண்டகால வேலைத்திட்டம்...
5 சதவிகிதம் வரை அவனுடைய ஒற்றை ஆள் நிறுவனத்துக்குத் தரகுத்தொகையாக வரும். மிகப்பெரிய தொகை. ஒரே நேரத்தில் இதே மாதிரி இரண்டு, மூன்று வேலைத்திட்டங்களுக்கு பணியாற்றிக்கொண்டிருப்பான் முகர்ஜி.
முகர்ஜி ஒரு மின்தூக்கியில் (lift) உள்ளே நுழைந்து.... அவனுடைய தளத்தில் வெளிவரும்வரை, அந்த மின்தூக்கியில் பத்து பேர் இருந்திருந்தால் ஐந்து பேரிடம் பேசியிருப்பான்... அதில் இரண்டு (அ) மூன்று பேர் அவனிடம் கைப்பேசி எண்களை மாற்றிக்கொண்டிருப்பார்கள்.
நானெல்லாம் ஓர் அலுவலகத்தில் பல வருடம் குப்பைக்கொட்டிருந்தாலும் ... அடுத்த ஆண்டு பக்கத்து கேபின்காரன் கூட என்னை மறந்திருப்பான்.
முகர்ஜி கையாள்வது மனிதர்கள்... மனிதர்கள்.... மனிதர்கள்....
இல்லை... இல்லை...
மனங்கள்... மனங்கள்... மனங்கள்...
நூற்றுக்கணக்கான மனிதர்கள்... அதுவும் மூளை திறன் சார்ந்த வேலைதிட்டகளில் ... மனித மனங்களைக் கையாள்வது என்பது மிகவும் சிக்கலானது.
பல மூளைகள் மேலாண்மையைக் கரைத்துக்குடித்து விட்டு ஒன்றுகூடி ஒரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முயலும்பொழுது... ஒரே ஒரு மனதில் எழுகிற பிசிறு... மொத்த வேலைத்திட்டத்தையும் சிதைத்துவிடும்.
கிளைக்கு, கிளை தாவும் மனித மனக்குரங்குகளை கையாளும் ஒரு வித்தைக்காட்டி முகர்ஜி.
ஆயிரம் வெள்ளி கோட் , சூட் போட்டுக்கொண்டு மூடிய சந்திப்பு அறைக்குள் (closed meeting room) ... சுழற்றி வீசப்படும்...மற்றவர்களின் மனக்கழிவுகளையும் , வக்கிரங்களையும் சுமந்துகொண்டு ஒரு கேவலமான சிரிப்புடன் அறையை விட்டு வெளியே வருவான்...
அவனுடைய சுயம், சுயமரியாதை எதைப்பற்றியும் கவலைப்படாத, காசுக்காக வளைந்து, நெளிந்து, குழைந்து... தேன் தடவிய பேச்சுகளைப் பேச வேண்டிய ஒரு ஈனவாழ்க்கை ....
இவ்வளவையும் அவன் செய்தாக வேண்டும்... அது ஒற்றை இலக்கு அந்த வேலைத்திட்டம் முழுமையாக நிறைவேற வேண்டும். இரண்டு நிறுவனங்களும் ஒப்பந்தப்படி பொருளாதார பரிமாற்றங்களை நிறைவேற்ற வேண்டும்.
சனி, 26 ஜூன், 2021
புனைவு - இருளோடு உறவாடிய பொழுதுகள் - பகுதி - 4 (உள்ளும் புறமும் -1)
(குறிப்பு : புனைவு எழுத்துகளில் உண்மையைத் தேடாதீர்கள். கொஞ்சம் உண்மையும், நிறையக் கற்பனையும் கலந்த நெடுந்தொடர்)
மனம் தேடுவது ஒரு சிறு அங்கீகாரம்... நம்மைப் பெருமையாகப் பேசுகிற நண்பன், தோழன் , குடும்பத்தார் அல்லது ஊர்க்காரர்கள் யாராவது அருகாமையில் இருக்கிறார்களா என்று ஏங்கித் தவிக்கும். ஊராரிடம் எல்லாம் தன்வூட்டுக்காரர் அருமை,பெருமைகளைப் பீற்றிக்கொள்ளும் மனைவிகள் கூட, முகத்துக்கு நேராகக் கணவனிடம் பெருமைகளைப் பேசுவது கிடையாது. "நீ பெத்த புள்ளைதானே..." என்று பிள்ளைகளின் சிறுமைகளைக் கூட அவன் கணக்கில் ஏற்றிவிடுவார்கள். வாழ்ந்தபொழுது அவனுடைய முகத்துக்கு நேராக ஒரு வார்த்தை பெருமையாகப் பேசாதவர்கள். செத்தபிறகு சுடுகாட்டுக்கொட்டகையில் உட்கார்ந்துகொண்டு "எவ்வளவு நல்ல மனுசன் தெரியுமா...!, ஒரு ஈ, எறும்புக்குக் கூட துன்பம் தரக்கூடாதென்று வாழ்ந்தவர் ...!" என்று பேசிக்கொண்டிருப்பார்கள். எழுத்தாளர் ஜி.நாகராஜன் கூறியது போல "மனிதன் மகத்தான சல்லிப்பயல்" "உள்ளூர் மாடு விலை போகாது” என்பார்கள். எங்கேயோ இருப்பவர்களைக் கொண்டாடுகிற மனிதர்கள், அருகாமையில் இருப்பவர்களை எளிதாகக் கடந்து செல்கிறார்கள் ஒருவித அலட்சியத்துடன். முகர்ஜி - ஓர் சிறிய அங்கீகாரத்திற்காக ஏங்கியவன்...! அவன் இங்கிருந்து கிளம்புகிறபொழுது ஏற்பட்ட உரசலில்... அவனுடைய மனது கலங்கித் தவித்த ஒன்று, அவன் மீதான ஏளனமும், இளக்காரமும் கூடிய பார்வையும், பழக்கமும். அவனுடைய சகோதரி வாயிலாகக் கிடைத்த... கடைசியாக அவன் எழுதிய குறிப்புகளில்... "அவனுடைய மனது அங்கீகாரத்திற்காக ஏங்கித் தவித்திருப்பதை உணர முடிந்தது." இத்தனை யாண்டுகளில் அவன் அழைத்தபொழுது பேசியிருக்கலாம், மன்னித்திருக்கலாம்... அவனை மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் இகழ்ந்திருக்கலாம், ஆனால் உன்னை எனக்குப் பிடிக்கும் என்று சொல்லியிருக்கலாம்... எத்தனையோ 'லாம்' - கள். ஆனால், அவன் கொட்டிய சொற்களில் ஏற்பட்ட காயங்களை ஒரு வேட்டைநாயைப் போல நக்கி, நக்கி காலத்தைக் கடத்தி விட்டேன். இனி, அழைத்தால் எடுக்க அவன் இல்லை என்கிற உண்மை முகத்தில் அறைகிறது. கண்ணீர் முட்டுகிறது, துயரம் அலை, அலையாய் எழுந்து வருகிறது... மனம் ஆழ்கடல் தோணியாய் அல்லலுறுகிறது. முற்பகுதிகள்... https://pktpaariarasu.blogspot.com/2021/06/3.html
https://pktpaariarasu.blogspot.com/2021/06/2.html
https://pktpaariarasu.blogspot.com/2021/06/1.html
வெள்ளி, 25 ஜூன், 2021
புனைவு - இருளோடு உறவாடிய பொழுதுகள் - பகுதி - 3 (ஒளிரும் இருள்)
(குறிப்பு : புனைவு எழுத்துகளில் உண்மையைத் தேடாதீர்கள். கொஞ்சம் உண்மையும், நிறையக் கற்பனையும் கலந்த நெடுந்தொடர்)
ஒளிரும் இருள்
இருள் ஒளிருமா…!?
ஒளிரும்…!
இரவு விடுதிகளில் (night club) இருள் ஒளிரும்.
நிறைந்த இருளில் (complete darkness) தான் மெலமைன்(Melamine) என்கிற ஹார்மோன் சுரக்குமாம்....! இருட்டு என்பதற்கும் இருள் என்பதற்குமே நிறைய வேறுபாடு உண்டு.
முழுமையான இருளை உணர மிகவும் கடினப்பட வேண்டிய சூழலில் நாம் வாழ்கிறோம்.... அது கடந்த காலங்களில் மிக இயல்பாக இருந்தது.
மிகச் சமீபத்தில் இருள் என்பதை நான் உணர்ந்தபொழுது என்பது... ஓர் கானகத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட நிகழ்வு.
இருளை உருவாக்குவதற்கு.... முதலில் செலவு செய்து நிறைய முறைகளில் அறைக்குள் இருளை உருவாக்கியிருப்பார்கள், பிறகு அந்த அறைக்குள் பல்வேறு கோணங்களில் ஒளிக்கற்றைகளைச் சுழற்றி பாய்ச்சும் வண்ண உமிழ் விளக்குகளை பொருத்தி இருப்பார்கள். அந்த ஒளிக்கற்றைகள் ஒன்றையொன்று வெட்டும் வெளியில் ஓர் இருள் இருக்கும். அந்த இருள் ஒளிரும்.
ஒவ்வொரு விடுதியிலும் வெவ்வேறு இடங்களில் ஒளிரும் இருள் வந்து போகும். பெரும்பாலும் அதை கசமுசா ஸ்பாட் எனப்படும். அந்த இடங்களில் இருக்கும் இருக்கைகள் சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
மைதானம் அளவில் இருக்கிற விடுதியில் சந்துகளும், மூலை முடுக்குகளும் இருக்கும். சிறிய விடுதிகள் கூட ‘ட’ மாதிரி அல்லது ‘ப’ மாதிரி அமைத்திருப்பார்கள்.
பிரம்மாண்ட விடுதிகளின் விளக்கு அமைப்புகளில் Lighting engineering -ன் அத்தனை சாத்தியங்களையும் செய்திருப்பார்கள். பார் கவுண்டர் வடிவமைப்பு மிக முக்கியமானது. அதற்காக பார்த்து, பார்த்து வடிவமைக்கப்பட்ட பார் கவுண்டர்கள் இருக்கின்றன.
முகர்ஜி இரவு விடுதிகளின் அத்தனை வகைகளையும் அறிமுகம் செய்து வைத்தான். குடிப்பதற்கு 50க்கு மேற்பட்ட குவளைகள் இருப்பதைக் காண்பித்திருக்கிறான். வெறும் பிளாஸ்டிக் குவளைகளில் கலந்து குடிப்பதற்கும்… வித, விதமாக வடிவமைக்கப்பட்ட குவளைகளில் குடிப்பதின் வித்தியாசத்தை உணர வைத்திருக்கிறான்.
சிங்கையின் இரவு வாழ்க்கையும் (night life) , விடுதிகளும் (clubs) மற்ற இரவு வாழ்க்கை நகரங்களுடன் ஒப்பிட்டு ஒன்றுமே இல்லை என்பான் முகர்ஜி.
நான் திகைத்து நிற்பேன்…!
ஒருமுறை, மிகப்பெரிய விடுதியில் நுழைந்தோம்… என்ன குடிக்கிறாய் என்றான்…!?
வழக்கம்போல பீர் என்றேன்… போடா என்று சொல்லிவிட்டு… பக்கத்திலிருந்த இருக்கைகளைப் பார்த்தான், ஒரு சீனன் cognac வாங்கி இரண்டு குட்டிகளுடன் குடித்துக்கொண்டிருந்தான்.
என்னிடம் கேட்டான் அந்த cognac எவ்வளவு விலை இருக்கும் தெரியுமா என்றான்…!
தெரியவில்லை என்றேன்… முப்பதாயிரம் வெள்ளிக்கு மேல் என்று சொல்லிவிட்டு இரு, வருகிறேன் என்று போனான்.
ஒரு cognac போத்தலுடன் வந்து அமர்ந்தான். எவ்வளவு என்றேன்…!?
பத்தாயிரம் வெள்ளிகள்…. மூச்சு நின்று விட்டது, அதிர்ச்சியில் வியர்த்து, வெளிறி விட்டேன்.
அதுவரை 250 வெள்ளிக்கு XO வாங்கி குடித்ததையே வாழ்நாள் சாதனையாகப் பீற்றிக்கொண்டிருந்த எனக்கு மூச்சிரைத்தது...!
காசு கொடுத்துவிட்டேன் கவலைப்படாதே… என்றான்.
100 ஆண்டுகளுக்கு மேலாக ஊறிய திராட்சை ரசம், வாசனையே ஆளை மயக்கியது.
விடிய, விடியக் குடித்தோம்…! பேசினோம்…! குடித்தோம்…! பேசினோம்…!
ஒரு நாள் இப்படியென்றால்… இன்னொரு நாள் எங்காவது… சீப்பாக டைகர் பீர் கிடைக்குமா என்று அலைவான்.
முகர்ஜி சொல்வான் நான் ஆலோசகராக () வாங்குவது முழுவதும் எனது ஊதியம் கிடையாது. அது மனிதர்களைக் கையாளுவதற்குக் கொடுக்கப்படும் பணம், அதிலிருந்து தான் நமக்கும் செலவு செய்துகொள்கிறேன் என்பான்.
உயரத்திலிருந்து பள்ளத்தில் விழுவதை முயல்கிற வாழ்க்கை...!
முற்பகுதிகள்...
வியாழன், 24 ஜூன், 2021
புனைவு - இருளோடு உறவாடிய பொழுதுகள் - பகுதி - 2 (அறிமுகம்)
(குறிப்பு : புனைவு எழுத்துகளில் உண்மையைத் தேடாதீர்கள். கொஞ்சம் உண்மையும், நிறையக் கற்பனையும் கலந்த நெடுந்தொடர்)
மத்தியான வேளையில் தின்னச் சோறு செரிக்கிற இடைவெளியில் நடக்கிற திண்ணை பேச்சில் தான் இந்த மாமாஜி அறிமுகமானான். அது நடந்தே இருக்காவிடில்... என் வாழ்வின் இருண்ட பக்கங்கள் ஏதுமேயில்லாமல் போயிருக்கலாம்...!
மணிக்கணக்கில் பேசும் என்னுடைய பேச்சுக்கென்று கவனிப்பாளர்கள் இருந்தார்கள்... வந்தான் சட்டென்று மடைமாற்றிப் போனான்... அயோக்கியன்..முகர்ஜி.!
அந்த நாளில்.... அண்டை அயலக கடைகளில் கிடைக்கும் 5 முதல் 10 சதவிகிதம் வரையிலான விலை மலிவு பற்றியும், வணிக வளாகங்களிலும், தொடர் பல்பொருள் அங்காடிகளிலும் கிடைக்கிற கழிவுகள் பற்றிய விவாதம்...!
சட்டென்று வந்தான்... சொன்னான்... என்ன சேமிப்பு உங்களுக்குக் கிடைக்கும்...! நூறு வெள்ளி ஓர் ஆண்டுக்கு இருக்குமா...!? ஏன்? இதைப்பற்றி இவ்வளவு கவலைப்படுகிறீர்கள்...!? உங்கள் ஊதியம் அடுத்த ஆண்டு 10 சதவிகிதம் உயர வேண்டும் என்று கவலைப்படுங்கள்...! அது இந்த சில்லறை தேற்றுவதை விடுவதை உன்னதமானது...!
அவனை அப்பொழுதான பார்க்கிறேன்... ஆறு அடிக்குக் குறைவில்லா உயரம், மங்கோலிய மஞ்சள் நிறம், பெருத்த தொப்பை... சிரித்த முகம்... எல்லாவற்றையும் இலவாக அணுகும்.... பண்புடன்.... ஒரு மனிதன்... என்னோடு முரண்படுகிறான்...!
அடுத்த ஆறு மாதங்களில் அவனோடு ஈசிக்கொண்டிருக்க போகிறேன் புதுசா கட்டிக்கொண்ட மனையாளைப் போல என்பது அறியாமல்... தொண்டைக்குழியின் நீர் வறள விவாதம்..!
பச்சோந்திகள்... என்னோடு இருந்தவர்கள்... புதிதாய் வந்தவனுக்குத் தட்டிய ஜல்ராவில்... ஒன்று மட்டும் உண்மை...! இங்கே வாய்ப்புக்கிடைத்தால் அத்தனை அயோக்கியத்தனத்தைச் செய்ய இந்த மக்கள் தயார்.. அதற்கு ஒன்றே ஒன்று மட்டும் தான் விலை...! சமூக அங்கீகாரம்... அதை விலைகொடுத்து வாங்கி விட முடிந்தால்... எதையும் செய்யத் துணியும் இந்த கூட்டம்...!
முந்தைய பகுதி...
https://pktpaariarasu.blogspot.com/2021/06/1.html
புனைவு - இருளோடு உறவாடிய பொழுதுகள் - பகுதி - 1 (முடிவுரை)
(குறிப்பு : புனைவு எழுத்துகளில் உண்மையைத் தேடாதீர்கள். கொஞ்சம் உண்மையும், நிறையக் கற்பனையும் கலந்த நெடுந்தொடர்)
அண்ணா,
XXXX கொல்கத்தாவில் மரணமடைந்துவிட்டார்.
சகோதரி
XXXX
ஆங்கிலத்தில் வந்த வாட்ஸ்அப் செய்தியின் தமிழாக்கம்.
அண்ணா,
கடைசியாக, ௦௦௦௦ அண்ணனின் மரணச்செய்தியைச் சொல்லச் சொன்னவர்களில் உங்களுடைய பெயரும் இருந்தது. அதனால் இந்த செய்தியை அனுப்புகிறேன்.
சகோதரி
XXXX
அழைத்தேன் பேசினாள்... அழகி...!
அண்ணா, அண்ணா என்றாள் நொடிக்கொரு முறை... பாதகி...!
எத்தனை இரவுகள் மனதுக்குள் காமக்கிறுக்கனாக்கி அலைய விட்டிருப்பாள்...
தமிழ் பேசினாள்... வங்காளத்து மையல் விழிக்காரி...!
சீ...சீ... மனக்குரங்கே... நில்... துக்கச்செய்தி சொல்கிறவளிடம்... (இவளைப் பற்றி இன்னொரு பகுதியில் பார்ப்போம்).
இறந்தது போனது மாமாஜி...! அவனை அப்படிதான் இங்கே எல்லோரும் கூப்பிடுவோம். அவன் வங்காளத்து முகர்ஜி, கோவிட்-19 ல் இறந்துவிட்டான். என்னைய விட சில வருடங்கள் இளையவன்.
முகர்ஜி, எந்த அடையாளத்திற்குள் சிக்காத தனித்துவமானவன். அவனை உங்களுக்கு அறிமுகம் செய்ய முயல்கிறேன்.
நான்கைந்து வருடங்களாகப் பலமுறை அழைத்திருந்தான், பேசவில்லை... எப்படிப் பேசுவது...!?
அவனுக்கும், எனக்குமான கடைசி சந்திப்பு... சிங்கப்பூர் நதியின் கரையில் நடந்த ஓர் வன்மமும், கொடூரமும் நிறைந்த மன வக்கிரங்களின் உரசல்களின் உச்சம்.
ஆறேழு வருடங்கள்... அவனுக்கு நான் செவ்வாழையாக, எனக்கு அவன் செவ்வாழையாக வாழ்ந்திருக்கிறோம். நான் ஏதுவொன்றைப் பற்றியும் மணிக்கணக்கில் பேசுவேன். முகர்ஜி எதைப் பற்றியும் நாட்கணக்கில் பேசுவான்.
கடைசியாக, இங்கிருந்து போகும்பொழுது... என்னுடைய மனவெளியைக் குத்தி, கொதறி, வைத்துச் சென்றுவிட்டான்.
எத்தனையோ மன்னிப்பு குறுஞ்செய்திகளை அனுப்பினான்...! மனது ஏற்கவில்லை... எப்படி ஏற்கும்...!?
நம்முடைய மனக்கசடுகளை, அற்பத்தனங்களை, போலித்தனங்களை அறிந்தவொருவன்... நீ...என்ன...! புடுங்கியா...!? என்கிற வினாவை முகத்திற்கு நேராக வைத்தால் என்னவாகும்...!?
இதையெல்லாம்... விட... அவன் கடைசியாகச் சொன்னது... நீ... இப்ப இருக்கிற பதவியிலிருந்து ஒரு படி உயர்ந்து விட்டால் சொல்.. வந்து ஊம்புகிறேன். "உன் மனசில் நான் மாமா தானே...!"
இத்தின வருடப் பழக்கத்திலும் அவன் எல்லோருடைய மனதிலும் ஒரு "கார்ப்பரேட் மாமா", அவனுடைய வேலை அப்படியானது.
மில்லியன் தொடங்கி பில்லியன் வரையிலான செயல்திட்டம் (project)- களுக்கு ஆலோசகர் (independent consultant) 2 சதவிகதிலிருந்து 5 சதவிகிதம் வரை ஊதியம்.
ஒப்பந்தம் கையெழுத்து அவதற்கு முன்பும், பின்பும் அந்த திட்டத்தை முழுமையாக நிறைவு பெற வைப்பதில் பெரும்பகுதி இவனுடையது.
டிராக் மாறுகிறது... அவனுடைய வேலையைப் பற்றி இன்னொரு பகுதியில் ....
நாலைந்து வருடமாக ... ஒரு படியாவது முன்னேறி.. அவனுடைய முகத்தில் காறித்துப்ப வேண்டும் என்றுதான் இருந்தேன்.
வாய்ப்பில்லை... போய்ச் சேர்ந்துவிட்டான்...
அடுத்து... (முகர்ஜி - அறிமுகம்)
வாழ்க்கை எவ்வளவு கொடூரமானது உயிருக்கும், உறவுக்கும் முடிவுரை எழுதிவிட்டு, அறிமுகம் எழுதத் தொடங்க வேண்டும்...!
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)