skip to main |
skip to sidebar
வாரயிறுதி தொலைப்பேசி அழைப்புகள்... பெரும்பாலும்... ஒரு புலம்பலாக இருக்கும்...!
நீண்ட நெடிய காலம் கடந்து வந்த ஓர் அழைப்பு... அழைப்பின் நோக்கம் முக்கியம்... "நான் யாருக்காவது கல்வி உதவி செய்யலாமென்று இருக்கிறேன்...!", நீ... செய்துக்கொண்டிருப்து எனக்குத் தெரியும்... யாருக்காவது தேவைப்பட்டால் சொல்... நான் செய்கிறேன் என்றார்...!
மகிழ்ச்சி...! உதவி செய்ய முன் வருவது... சமீப காலங்களில் அதிகரித்திருக்கிறது. வறுமைக்கும், நடுத்தர வர்க்கத்திற்கும் இடையில் போராடிக்கொண்டிருந்தவர்கள்... உழைப்பாலும், சமூக நீதி கல்வி வாய்ப்புகளாலும் முன்னேறி... உலக மயமாக்கல் தந்த வாய்ப்புகளில் நடுத்தர வர்க்கத்திற்கும், உயர் நடுத்தர வர்க்கத்திற்கும் இடையில் தொங்கிக்கொண்டு... கீழிருப்பவனுக்குக் கைகொடுக்க வேண்டும் என்று எண்ணுகிற எண்ணமே மிக உயர்வானது...!
உதவ வேண்டும் என்கிற எண்ணமும், விழைவும்... அதைச் செயலாக்கி வெற்றி பெறச் செய்வதும் முக்கியம். உண்மையில் உதவி செய்கிற நிகழ்வில் நன்கொடை, இலவசமாகக் கொடுப்பது தவிர்த்து... மிகப் பெரும்பான்மை தோல்வியில் முடியும்.
உதவி என்பது ஒரு மனிதனின் துன்பத்திலிருந்து (அ) துயரத்திலிருந்து மீட்கவோ, அவருடைய வாழ்க்கையை அடுத்தகட்ட நகர்வுக்கு கொண்டுசெல்ல நிகழ்த்தப்படுகிற நிகழ்வு...!
சிலர்... உதவி என்பதை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் செய்கிற ஒன்றாக கருதி... அலப்பறை கூட்டுகிறார்கள்...!
"நண்பன் என்று அவனுக்கு Resume தயார் செய்து நிறுவனத்தில் வேலை வாங்கி தந்ததே நான் தான்..." நன்றி மறந்துவிட்டான் என்று ஒருவர் புலம்பினார்.
"நான் நண்பர்களுக்காக இழந்தது எவ்வளவு தெரியுமா...!" என்று ஒருவர் புலம்பினார்...!
நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் செய்வது உதவி அல்ல... அது வாழ்வியல் கடமை...!
இந்த மாதிரியான நபர்கள்... நாளை நான் என் பொண்டாட்டி, பிள்ளைகளுக்கு எவ்வளவு செய்தேன் தெரியுமா...! என்று கேட்கிற அளவுக்குச் சுயநலமாக மாறுவார்கள்...!
மனிதன் விலங்காக அல்லாமல்... தத்துவஞானி சாக்ரடீஸ் சொன்ன " மனிதன் ஒரு சமூக விலங்கு" என்பதன் பொருளே...! நாம் மனிதர்களாக ஒருவருக்கொருவர் உதவி வாழ்வதாக இருக்கும்...!
நமக்கு அறிமுகம் அல்லாத மனிதர்களுக்கு உதவ எண்ணுகிற... உள்ள வேட்கையும், உந்தலும் தான்... உதவி என்பதன் உண்மையான பொருள்....!
வலைப்பின்னல்... பர்சனல் கேரியர் நெட்வொர்க்கிங் என்பது சமூக ஊடக காலத்தில்... சுயநலத்திற்காக முகிழ்வதற்கு முன்பே... மனிதர்களுக்கு உதவுவதற்கு என்று ஒரு வலைப்பின்னல் இருக்கிறது... அதன் வாயிலாகத் தான் வறுமை ஒழிப்பு, உணவு வழங்கல் போன்று எண்ணற்ற திட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
சுயநலமான வலைப்பின்னல் மாதிரியல்ல... இந்த உதவுகிற வலைப்பின்னல் என்பது மிகவும் நெகிழ்வு தன்மைகொண்டது... விருப்பமிருப்பவர்கள் தேவைக்கேற்ப இணைந்துக்கொளவார்கள்...!
இதை சில எடுத்துக்காட்டுகளுடன் விளக்க வேண்டும்...
நான் 2008-ல் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உடை வழங்க முடிவு செய்தேன்...! அதை உணர்ந்த நண்பர் Joseph B Paulraj அவருடைய வட்டத்தில் முயற்சி செய்கிறார்... அப்பொழுது பதிவுலகத்திலிருந்த பரிசல்காரன் (என்கிற) கிருஷ்ணகுமார் உதவ முன்வந்து அந்த சங்கிலியில் தன்னை இணைத்துக்கொள்கிறார். திருப்பூரில் ஆயத்த ஆடை நிறுவனத்தில் மேலாளராக இருக்கிற இவர்... அவருடைய நண்பர்கள் துணையுடன்... "நீங்கள் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் சொல்லுங்கள் நாங்கள் ஆடையைத் தயார் செய்து தருகிறோம் என்று", " அயர்னிங் மற்றும் பேக்கேஸ்" செலவுகளை மட்டும் பெற்றுக்கொண்டு அத்துணை குழந்தைகளுக்கும் இரண்டு உடைகளைப் பட்டுக்கோட்டைக்கு அனுப்பி வைத்தார்...! நான் யாரென்று அவருக்கு இந்த நாள் வரை தெரியாது...! மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே முக்கியம்...!
கடலூர் புயல், வெள்ள நிவாரண நிகழ்வையொட்டிய.... அங்கிருக்கும் கிராமப்புற பள்ளிக்குழந்தைக்கு.. புத்தகப்பை வழங்க முயன்றோம்...! நாங்கள் இலக்கு வைத்த 300 பைகளை 500 ஆக மாற்றியதில் ஈரோடு கதிர் அவர்களுக்கு முக்கிய பங்கு இருந்தது. பை தயாரிக்கும் நிறுவனத்தை நேரடியாக தொடர்புகொண்டு மிகக் குறைந்த அடக்க விலையில் அந்த பைகளைப் பெற்றுத் தந்தார்...! உற்பத்தியாளர் இடத்திலிருந்து... கடலூர் சென்று சேருவதற்கான லாஜிஸ்டிக்ஸ் என்கிற ஒன்றுக்கு இதுநாள் வரை அவர் என்னிடம் எந்த பொருளும் கோரியதில்லை.... உதவ முயல்வதற்கான... உதவி வலைப்பின்னல் தானாக அமையும்...!
இங்கே இன்னும் மனிதர்கள்... சமூகமாக உயிர்ப்புடன் இருக்கிறார்கள்...!
தொடரும்... உதவி செய்வதற்குப் பின்னால் உள்ள சிரமங்களும்... சிக்கல்களும்...!