திங்கள், 1 ஜூன், 2020

மாற்றங்களுக்கு தயாராகுங்கள்...

 


தகவல் தொழில்நுட்ப துறை (IT) வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஊகச்செய்திகள் வாயிலாக நம்பிக்கையின்மை பரப்பப்படுகிறது. ஆனால் உண்மையில் தகவல் தொழில்நுட்ப துறை கடந்த 20 ஆண்டுகளில் குழந்தையாய் தவழ்ந்து, நடைபயின்று, வளர்ந்து ஓர் இளவரசியாய் ஆட்சி அதிகாரம் செய்துகொண்டிருக்கிறது.

ஒவ்வொரு துறைக்கும் சில ஆண்டுகள் மாற்றங்களுக்கான தேக்க நிலை ஏற்படும். இந்த இளவரசி ஓர் பேரரசியாய் இன்னும் சில ஆண்டுகளில் மாற்றம் காணப்போகிறாள். அவளுக்கு உறுதுணையாய் பல்வேறு தொழில்நுட்பங்கள் படை நடத்தப் போகின்றன.
1. திரள் கணிமை (Cloud Computing)
2. மீதரவு & தரவு பகுப்பாய்வு ( Bigdata & Data Analysis)
3. இணையக்கருவிகள் ( IOT)
4. செயற்கை நுழைபுலன் ( Artificial intelligence)
5. தானியக்கம் ( Automation)
6. கானல் மெய்மை ( Virtual Reality)


இன்னும் பல புதிய தொழில்நுட்பங்கள் ஆய்வு மற்றும் வளர்ச்சி பிரிவிலிருந்து பயன்பாட்டுக்கு வர இருக்கின்றன.

தகவல் தொழில்நுட்ப பேரரசியின் காலடியில் வீழாத துறைகளே இருக்கப் போவதில்லை. 2020 லிருத்து 2050 வரை - அடுத்த 30 ஆண்டுகள் தகவல் தொழில்நுட்பம் தான் ஒரு தலைமுறைக்கு பேரராட்சி செய்யப் போகிறது.

எடுத்துக்காட்டாக மருத்துவத் துறை எப்படியான மாற்றங்களைச் சந்திக்கும் என்று பார்க்கலாம், இவற்றில் சிலவை உடனடியாக நடக்கலாம் அல்லது வேறு தொழில்நுட்பங்களுடன் வேறு ஒரு பரிணாமத்தில் வரலாம்...

இனி நேரடியாக மனித மருத்துவரை அணுக வேண்டிய தேவையிருக்காது. ஒரு கானல் மெய்மை உதவியாளரை ( virtual reality assistance) அணுகினால் அவர் உங்களுடைய நோயின் ( disease) அல்லது ஒழுங்கற்ற தன்மையின் (disorder) தகவல்களைத் திரட்டி  அனுப்புவார்.( செயற்கை நுழைபுலன் வாயிலாக இயங்கும் ஆய்வகங்கள் வாயிலாக இந்த தகவல்களை நீங்கள் பெற வழிவகை இருக்கும் ).

உங்களுடைய தகவலைத் தரவு மாற்றம் செய்து பல பில்லியன் மருத்துவ தகவல் அறிக்கைகளுடன் ஒப்பீடு செய்யப்படும். இதற்காக மீதரவு மற்றும் தகவல் பகுப்பாய்வு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும்.

மருத்துவ நிறுவனங்கள் நோயாளிகளின் தகவலைச் சேமிப்பது மிக முக்கியமாக இருக்கும். நோயாளிகளின் தகவலைப் பொதுவெளியில் பயன்படுத்த மருத்துவ நிறுவனங்கள் காசு தர வேண்டியிருக்கும். மிக அதிகமான நோயாளிகளின் தகவலைச் சேமித்து வைத்திருக்கும் நிறுவனங்கள் மருத்துவத்துறையில் அதிகாரம் செய்வார்கள்.

தானியக்க தொழில்நுட்பமும் , செயற்கை நுழைபுலனும் இணைந்து வடிகட்டிய தரவுகள் ஒரு மருத்துவரைச் சென்றடையும். இங்கே மருத்துவர் இயல்பாகத் தகவல் தொழில்நுட்ப நுணுக்கங்கள் அறிந்தவராக இருக்க வேண்டும் அப்பொழுது தான் தகவல் வடிகட்டிகளைச் (data filters) சரிசெய்யவும், தரவு பகுப்பாய்வும் செய்ய முடியும்.

இறுதியாக மருத்துவர் அவருடைய சிகிச்சைப் பரிந்துரைகளைக் கொடுக்கிறார். அது அப்படியே ஈயடிச்சான் காப்பியாக பழைய சிகிச்சை முறையாக இருக்கலாம். ஒரு நுழைபுலன் மிகுந்த மருத்துவர் புதிய சிகிச்சைப் பரிந்துரைகளை இணைத்திருக்கலாம். இவை அனைத்தும் புதிய மருத்துவ தகவல் அறிக்கையாகச் சேமிக்கப்படும்.

இப்படி ஒவ்வொரு துறையும் தகவல்களாலும், தரவுகளாலும் மாற்றமடையப் போகின்றன.
இனிவரும் காலம்... தகவல் தொழில்நுட்ப பேரரசி இட்டதே கட்டளை, அதுவே சாசனம் ...!

அன்புடன்
பட்டுக்கோட்டை பாரி.அரசு

சனி, 30 மே, 2020

வீழ்ச்சிக்கு பின்...1

நண்பர்கள் சிலருடன் அலைபேசி வாயிலாக உரையாடிக்கொண்டிருந்தபொழுது, இந்த நோய்த்தொற்று (covid-19) முடக்கத்தினால் வந்த வீழ்ச்சிக்குப் பின்பு ஒரு எழுச்சி ஏற்படுவதைப் பற்றிய உரையாடல் நிகழ்ந்தது. 

ஒவ்வொரு வீழ்ச்சியும், ஒரு புதிய தொடக்கத்தின் ஆரம்பம் தான்...

ஏற்கனவே 6 மாதங்களுக்கு முன்பு வரப்போகிற தொழில்நுட்ப மாற்றங்களை ஒட்டி ஒரு பதிவு எழுதி இருந்தேன்
(மாற்றங்களுக்குத் தயாராகுங்கள்...)https://pkt-paari-arasu.blogspot.com/2019/09/blog-post.html

ஊதியம், வேலைவாய்ப்பு

வளர்ந்த நாடுகளில் அறிவு மற்றும் நுழைபுலன் ( Knowledge & intelligence) சார்ந்த வேலைகளுக்கு 20% இருந்து 100%  வரை ஊதிய உயர்வு நிகழும்.  எல்லைகள் மூடப்பட்டிருப்பதால் எழுகிற மனித வள பற்றாக்குறையும், புதிய அலையாக எழுகிற தேசிய பார்வைகளும் இந்த ஊதிய உயர்வை உந்தி தள்ளும்.

ஏற்கனவே ஜப்பான்,கொரியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் இந்த ஊதிய உயர்வை உணர தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த முடக்கம் மனிதர்களின் உதவியின்றி  பணிவிடைகளை (service) பெறுவதற்கான பயிற்சிக் களமாக இருக்கிறது.
ஆகையால் பணிவிடை சார்ந்த ( Service & Hospitality Industries) வேலைகள் முற்றிலுமாக குறையும். கிட்டதட்ட 90 % வேலையிழப்பு இந்த துறையில் நிகழும்.

வளரும் நாடுகளில் மிகப்பெரிய ஊதிய இழப்பும், வேலைவாய்ப்பு இழப்பும் நிகழும். இதில் இந்தியா, பிரேசில் முதன்மையாக வீழ்ச்சியை எதிர்கொள்ளப் போகின்றன .இந்தியாவில் ஆந்திரா கேரளா, தமிழ்நாடு போன்றவை சிறிது காலம் தாக்குப் பிடிக்கலாம். நீண்ட கால நோக்கில் வீழ்ச்சியைத் தவிர்க்க இயலாது.

மியன்மார், வியட்நாம், இலங்கை, வங்காள தேசம் போன்றவை அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிப் பாய்ச்சலுடன் விரையும். வளர்ந்த நாடுகளின் மனித வள பற்றாக்குறையை இந்த நாடுகள் தான் அடுத்த ஓரிரு தலைமுறைகள் நிறைவு செய்ய முயற்சிக்கும்.

கடந்த காலங்களில் Recession ( 2000-2001) மற்றும் Great Recession ( 2007-2009) பின்பு எழுச்சியில் இந்தியாவில் மிகுந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டன. அதற்கு காரணம் அப்போதைய அரசியல் தலைமைத்துவமும், தென்மாநிலங்களில் ஏற்பட்டிருந்த வளர்ச்சிக்கான கட்டமைப்பும் சிறப்பானதாக இருந்தது.

2000- பின்பு ஏற்பட்ட முன்னேற்றங்களுக்குத்  தென் மாநிலங்களில் விடுதலைக்குப்  பின்பு இடப்பட்டிருந்த அடித்தளம் மிக முக்கிய காரணம்.

இந்தியாவில் அடுத்த இரண்டு தலைமுறைகளுக்கான எல்லாவிதமான வாய்ப்புகளும் மிகக் குறைவாக இருக்கும்,  இப்பொழுது இருக்கிற சானதான (வர்ண) நோய் பீடித்த அரசியல் தலைமைத்துவம் தான் இதற்கு முழு முதற் காரணம்.

உங்களுடைய தம்பிகளோ, தங்கைகளோ அல்லது அடுத்த தலைமுறை உறவுகளோ ... இந்த வீழ்ச்சியிலிருந்து தப்பிப் பிழைக்க அறிவு மற்றும் நுழைபுலன் ( Knowledge & intelligence)  சார்ந்த வேலைகளுக்குப் பயிற்சி எடுக்க ஊக்குவியுங்கள். எந்த துறையாக இருந்தாலும் இனிமேல் அறிவு மற்றும் நுழைபுலன் ( Knowledge & intelligence)  சார்ந்த ஊழியர்கள் மட்டுமே தேவைப்படுவார்கள்.







Related Posts with Thumbnails